பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தேனாம்பேட்டை மண்டலம், ஆர்.கே சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்வதால் 9ம் தேதி காலை 10 மணி முதல் 10ம் தேதி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறுக்குட்பட்ட குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி, தேனாம்பேட்டை - சூளைமேடு, வள்ளுவர் கோட்டம், ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், தி.நகர், கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி, மயிலாப்பூர் கோடம்பாக்கம் - வடபழனி, மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, சிஐடி நகர், அடையாறு - சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.