பராமரிப்பில் நாள்தோறும் பிரச்னை வீணாகும் பல லட்சம் லிட்டர் காவிரி கூட்டு குடிநீர்
*100 கிராம மக்கள் பாதிப்பு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் பராமரிப்பு பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனம் முறையாக பராமரிக்காததால், உடைப்புகள் மூலம் தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. அதே நேரத்தில் குடிநீரின்றி 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பரிதவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, போகலூர், நயினார்கோயில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, ராமநாதபுரம், திருப்புல்லாணி மற்றும் மண்டபம் ஆகிய 11 யூனியன்களில் 429 பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றின் கீழ் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதுபோன்று சாயல்குடி, அபிராமம், தொண்டி உள்ளிட்ட 7 பேரூராட்சிகள் மற்றும் ராமேஸ்வரம், ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி உள்ளிட்ட 4 நகராட்சிகள் உள்ளன.
மாவட்டத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்காக கலைஞரால் கடந்த 2010ம் ஆண்டில் ரூ.616 கோடி மதிப்பீட்டில் காவிரி-ராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே உள்ள முத்தரசநல்லூர் பகுதி காவிரி ஆற்றில் 4 ராட்சத கிணறுகள், நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது.
அதிலிருந்து குழாய்கள் மூலமாக புதுக்கோட்டை, சிவகங்கை வழித்தடத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அப்போது நாள் ஒன்றிற்கு 100 எம்.எல்.டி தண்ணீர் வழங்கப்பட்டதால் 3 மாவட்டத்தை சேர்ந்த சுமார் 16 லட்சம் மக்கள் பயன்பெற்று வந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள், 11 யூனியன்களிலுள்ள சுமார் 2 ஆயிரத்து 300 கிராமங்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் நடந்து வந்தது.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் முறையான பராமரிப்பின்மை, ஆங்காங்கே குழாய் சேதம், முறைகேடான இணைப்பு போன்ற காரணங்களால் தற்போது 75 எம்.எல்.டிக்கு கீழான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கிராமங்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை நிலவியது.
சாலை மார்க்கமாக செல்லும் குழாய்களில் மக்கள் தண்ணீர் பிடித்து, தள்ளுவண்டிகளில் குடங்களை வைத்து தள்ளி வருகின்றனர். கோடை காலங்களில் தண்ணீர் தேவை அதிகரிப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து முதல்வரின் உத்திரவின் பேரில் கடந்த 2023ம் ஆண்டு திருச்சி நீரேற்று நிலையம் முதல் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வரை நகராட்சி நிர்வாகம், நகர்பகுதி, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக திருச்சி முத்தரசநல்லூர் பகுதி காவிரி ஆற்றில் கூடுதலாக ஒரு புதிய ராட்சத கிணறு மற்றும் புதிய குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிக்காக 2023ம் ஆண்டில் ரூ.555 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முழுமை பெற்றது.
இதனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துகளில் உள்ள 3,163 கிராமங்களில் சுமார் 20 லட்சம் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் பராமரித்து வந்தனர்.
இதனால் காவிரி குழாய்கள், நீர்த்தேக்க தொட்டிகள், உடைப்பு சரி செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக உடனுக்குடன் நடந்து வந்தது. இதனை போன்று பிரதான பம்பிங்க் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நீண்ட தொலைவிலுள்ள கிராமங்களுக்கும் வாரத்திற்கு 2 முறைக்கு மேல் சீரான குடி தண்ணீர் விநியோகம் நடந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் பராமரிப்பு பணிகளை கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் செய்து வருகிறது. அந்தந்த யூனியன், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு சப்.காண்ட்ராக்டர்களாக உள்ளூர் வாசிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஆனால் முறையான பராமரிப்பின்றி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்ட பிரதான சாலை பகுதிகளில் குடிநீர் குழாய்களில் இருந்து உடைப்பு ஏற்பட்டு நாள் ஒன்றிற்கு லட்ச கணக்கான லிட்டர் காவிரி கூட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் பிரதான குழாய் செல்லும் சாலை மார்க்கமாக உள்ள ஊர்கள் தவிர்த்து நூற்றுக்கணக்கான சிறிய, குக்கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில்லை.
இதனால் ஒருபுறம் குடிநீர் வீணாகி வரும் நிலையில், கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டேங்கரில் விற்கும் தண்ணீரை விலைக்கு வாங்கியும், காவிரி கூட்டு குடிநீர் குழாயில் இருந்து கசியும் தண்ணீரை மணிக்கணக்கில் காத்து கிடந்து அள்ளி, தள்ளுவண்டிகளில் குடத்தை வைத்து தள்ளிச்சென்று அவதிப்படுவதாக கிராமங்களில் வாழக்கூடிய ஏழை எளிய மக்கள் கூறுகின்றனர்.
வெயிலில் காத்திருப்பு
கடலாடி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் கிராமக்கள் கூறும்போது: ‘‘தனிச்சியம் பஞ்சாயத்து கிருஷ்ணாபுரத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் முறையாக வருவது கிடையாது. இதனால் டேங்கரில் விற்கும் தண்ணீரை ரூ.10 கொடுத்து வாங்கியும், பெரும்பாலானோர் சாலையோரம் செல்லும் குழாயிலிருந்து கசியும் தண்ணீரை மணிக்கணக்கில் காத்து கிடந்து அள்ளி பயன்படுத்தி வருகிறோம்.
தண்ணீர் சுகாதாரமற்று இருப்பதால் தொற்று நோய்களும் பரவி வருகிறது. வெயிலில் மணிக்கணக்கில் காத்து கிடந்து தள்ளுவண்டியில் குடங்களை வைத்து தள்ளி செல்வதால் பெண்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படுகிறது. எனவே சீரான காவிரி கூட்டு குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.