மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் பெயர் மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும்: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை: தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் பெயரை மாற்றுவது, மகாத்மாவின் மீதான வெறுப்பின் உச்சமாகும். கிராமத் தொழிலாளர் குடும்பங்கள் தலா ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறுவது சட்டபூர்வ உரிமையாக வழங்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் பெயரில் உள்ள “மகாத்மா காந்தி” பெயரை நீக்கி விட்டு, சாது “பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா” என பெயரை மாற்றுவது என, பாஜக ஒன்றிய அரசு நேற்று முடிவு எடுத்திருப்பதை தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் கடுமையாக ஆட்சேபிக்கிறது.
“மகாத்மா காந்தி” பெயரில் பாஜக ஒன்றிய அரசு நடத்தும் வன்மம் மிகுந்த தாக்குதலை தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் பெயரை மாற்றும் திட்டத்தை கைவிடவும், வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை வழங்கும் நாட்களை ஆண்டுக்கு 200 ஆகவும், தினசரி குறைந்த பட்ச ஊதியம் ரூ.700 ஆக நிர்ணயித்து வழங்கவும் வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.