மகாராஷ்டிரா பெண் மருத்துவர் தற்கொலை பாஜ அரசின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிப்படுத்துகிறது: ராகுல் காந்தி கண்டனம்
புதுடெல்லி: மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள பல்தான் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 23ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபால் பதானே, சாப்ட்வேர் இன்ஜினியர் பிரசாந்த் பங்கார் ஆகியோர் தன்னை மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதே தனது தற்கொலைக்கு காரணம் என அவர் தனது கையில் எழுதி வைத்திருந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மற்றவர்களின் துன்பத்தைப் போக்க விரும்பிய ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவர், ஊழல் நிறைந்த அதிகார வர்க்கம் மற்றும் அமைப்பில் உள்ள குற்றவாளிகளின் சித்திரவதைக்குப் பலியாகிவிட்டார். குற்றவாளிகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தவரே, அப்பாவியான இந்த பெண் மருத்துவருக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டல் போன்ற மிக இழிவான குற்றத்தைச் செய்துள்ளார்.
எனவே, இது தற்கொலை அல்ல, நிறுவனக் கொலை. பாஜவுடன் தொடர்புடைய சில செல்வாக்கு மிக்க நபர்கள், பெண் மருத்துவரை ஊழல் செய்யும்படி அழுத்தம் கொடுக்க முயன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரம் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்புக் கவசமாக மாறும் போது, நீதியை யாரிடம் எதிர்பார்ப்பது? பெண் மருத்துவரின் மரணம், பாஜ அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற மற்றும் உணர்ச்சியற்ற முகத்தை வெளிப்படுத்துகிறது. நீதிக்கான இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.