மகாராஷ்டிராவில் 96 லட்சம் போலி வாக்காளர்கள்: நடவடிக்கை எடுக்க ராஜ் தாக்கரே வலியுறுத்தல்
மும்பை: மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தனது கட்சியை சேர்ந்த வாக்குசாவடி முகவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய தாக்கரே, வாக்காளர் பட்டியலில் மோசடி மூலமாக தேர்தல் நடத்தப்பட்டால் அது வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அவமானமாகும். போலி வாக்காளர்களை கண்டறிவதற்கு வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியது அவசியமாகும்.
பிராந்திய கட்சிகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. வரவிருக்கும் தேர்தல்களுக்காக மகாராஷ்டிராவில் 96 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை அறிந்தேன். மாநில தேர்தலின்போதும் அவர்கள்(பாஜ) இதனை செய்திருந்தனர். மும்பையில் 8 முதல் 10லட்சம் போலி வாக்காளர்களும், தானே, புனே மற்றும் நாசிக்கில் 8 முதல் 8.5லட்சம் போலி வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்பு தேர்தல்களுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் முரண்பாடுகளை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்\” என்றார்.