மகாராஷ்டிராவில் சோகம் 4 மாடி கட்டிடம் இடிந்து 12 பேர் சாவு; 6 பேர் காயம்
மும்பை: மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் நகரில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் 50 வீடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து, அருகிலுள்ள காலியான குடியிருப்பின் மீது இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு வீர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர். எனினும் விபத்துக்குள்ளான கட்டிடம் நெரிசலான பகுதியில் அமைந்துள்ளதால் மீட்பு பணிகளுக்கு கனரக இயந்திரங்களை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் இடிபாடுகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. விபத்து நடந்த பல மணி நேரத்துக்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து 24 வயது இளம் பெண், அவரது ஒரு வயது பச்சிளம் குழந்தை உள்பட 6 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் புதைந்திருக்கலாம் என நம்பப்படும் நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.