மகாராஷ்டிராவில் கொடூரம்; 4 வயது சிறுமி பலாத்கார கொலை
மாலேகான்: மகாராஷ்டிரா மாநிலம், மாலேகான் அருகே உள்ள டோங்ரளே கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கல்லால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மாலேகான் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்களும், கிராம மக்களும், நேற்று (நவ. 17) மாலேகான் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு, குற்றவாளியைத் தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி, சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் மொசம் பாலம் அருகே சாலை மறியலிலும் ஈடுபட்டனர். ‘குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றும் அவர்கள் முழக்கமிட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், மகாராஷ்டிர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதாஜி பூசே, சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உரிய நீதி கிடைக்க உறுதியளித்தார்.