மகாளய அமாவாசையால் துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைவு
*மக்கள் கூட்டமும் குறைவாக காணப்பட்டது
கடலூர் : கடலூர் துறைமுகத்தில் மீன் வரத்து குறைவாக இருந்த நிலையில் பொதுமக்களும் மீன்கள் வாங்க வராததால் கூட்டம் குறைவாக காணப்பட்டது.கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
இதனால் கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், புரட்டாசி மாதம் கடந்த 17ம் தேதி துவங்கியது. இந்த மாதத்தில் பெரும்பாலானோர் விரதம் கடைபிடிப்பதற்காக அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்ணுவர். புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மகாளய அமாவாசை என்பதால் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஒரு சில பொதுமக்களே வந்தனர்.
அதே வேளையில் மீன்கள் வரத்தும் குறைவாக இருந்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படும் மீன்பிடி துறைமுக பகுதி நேற்று பரபரப்பு இல்லாமல் காணப்பட்டது.