மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலம் கூவம் ஆற்றில் கட்டுமானப் பணிகள் பருவமழைக்கு முன்பே முடிவடையும்: ராமேஸ்வரம் - தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து திட்ட அறிக்கை தயாரிப்பு; அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை: சென்னை தியாகராய நகர் தனியார் விடுதியில் நடந்த நீலப் பொருளாதார மாநாடு-2025ஐ பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பருவமழைக்கு முன்பே மதுரவாயல்- சென்னை ஈரடுக்கு மேம்பாலத்திற்காக கூவத்தில் கட்டப்படும் பணிகள் முடிக்கப்படும். அதனை தொடர்ந்து இதர பணிகள் நடைபெறும். அதேபோல் பணிகள் நடைபெறுவதால் மட்டுமே கட்டுமான கழிவுகள் உள்ளதாக தெரிகிறது. ஆனால் பணிகள் முடிந்தவுடன் முழுவதுமாக அகற்றப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் முதல் தலைமன்னார் வரை கடல் வழிப்போக்குவரத்து அமைக்கப்பதற்காக ஐஐடி மூலம் திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக ரூ.130 கோடி தேவைப்படுகிறது. எனவே சாகர்மாலா திட்டம் மூலம் நிதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக ஒன்றிய அமைச்சரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பூஞ்சேரி முதல் எண்ணூர் வரை கடல்வழி மார்க்கமாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 9 ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 3 கட்டமாக நடந்து வருகிறது. எந்த ஒரு பணியும் 85 சதவீதம் நிலம் எடுப்பு பணிகள் முடிந்தால் மட்டுமே கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான டெண்டர் தொடங்கப்பட வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலூர் பசுமை துறைமுகம் அமைப்பதற்கான நிலஎடுப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சென்னை மற்றும் காமராஜர் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால், செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயலாளர் வெங்கடேஷ், இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் தேவராஜன் மற்றும் துறைமுக மேம்பாட்டாளர்கள், துறைமுக நிர்வாகிகள், துறைமுக பயனீட்டாளர்கள், கடல்சார் சுற்றுலா சார்ந்த செயல்பாட்டாளர்கள், மீன்வள மற்றும் மீன்வளர்ப்புத் துறை சார்ந்த வல்லுனர்கள், கப்பல் கட்டுதல், பழுதுபார்த்தல் துறை வல்லுநர்கள், பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்கள், கடல்சார் வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.