மதுரை குயவர்பாளையத்தில் கழிவுநீர் தேக்கத்தால் சுகாதாரக்கேடு: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
மதுரை: மதுரை குயவர்பாளையத்தில் சாலையில் கழிவுநீர் தேங்கிக் கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மதுரை முனிச்சாலையிலிருந்து கீழவாசலுக்கு செல்லும் முக்கிய சாலையாக குயவர்பாளையம் சாலை இருக்கிறது. இப்பகுதியின் பாதாளச்சாக்கடை கால்வாய் நிரம்பி, கழிவுநீர் சாலையில் தேங்கிக் கிடக்கிறது. இந்தப் பகுதியில் பல்வேறு உணவகங்கள், மளிகை, காய்கறிக்கடைகள் உள்ளன. சாலையில் கழிவுநீருடன், அருகில் உள்ள ஒர்க்ஷாப்பில் இருந்து வரும் கழிவுநீரும் தேங்கிக் கிடக்கிறது.
இது குறித்து குடியிருப்போர் சங்கத்தினர் கூறுகையில், ‘மதுரையின் மிக முக்கிய குயவர்பாளையம் சாலையில் முழுக்க கழிவுநீர் தேங்கியுள்ளது. குடியிருப்புவாசிகள் மட்டுமல்லாமல், இப்பகுதியைக் கடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் என பலரும் அவதிப்படுகின்றனர். அருகாமையில் பெண்கள், ஆண்கள் பள்ளிகளுடன், நர்சிங் பயிற்சி மையம், மருத்துவமனை ஆகியவை உள்ளன. சாலையில் கழிவுநீர் ஒரு வாரத்திற்கும் மேலாக தேங்கிக் கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.