மதுரையில் பரபரப்பு துப்பாக்கியால் சுட்டு மாணவர் தற்கொலை
மதுரை: மதுரையில் 10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, சர்வேயர் காலனி பகுதியை சேர்ந்தவர் வடிவேல். தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் யுவன், மேலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் பதக்கம் பெற்ற யுவன், மதுரை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.யுவனின் பெற்றோர் நேற்று காலை கோயிலுக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த யுவன் ஏர்கன் ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீடு திரும்பிய பெற்றோர் யுவன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதூர் போலீசார் யுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக மாணவன் யுவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.