ரூ.10.25 கோடியில் சீரமைப்பு பணிகள் விறுவிறு; புதுப்பொலிவு பெறுகிறது மதுரை காந்தி மியூசியம்
தொடுதிரை, ஆடியோ, வீடியோ அரங்குகள்
நவீன டிஜிட்டல் வசதியுடன் விரைவில் திறப்பு
மதுரை: தமிழக அரசின் ரூ.10.25 கோடி நிதியில் மதுரை காந்தி மியூசியத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று புதுப்பொலிவு பெற்று வருகிறது. தொடுதிரை, ஆடியோ, வீடியோ அரங்குகள், நவீன டிஜிட்டல் வசதியுடன் விரைவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. தொன்மை சிறப்பு வாய்ந்த மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக காந்தி மியூசியம் திகழ்கிறது. 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராணிமங்கம்மாளின் கோடைகால அரண்மனையில் காந்திமியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. 1959ல் பிரதமர் நேரு இந்த மியூசியத்தை நாட்டிலேயே முதன்முறையாகத் துவக்கி வைத்தார். சுதந்திரப்போராட்ட வரலாறுகள், காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு, அவர் இறுதிநாளில் அணிந்த ரத்தக்கறை படிந்த வேட்டி உள்ளிட்ட பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், காந்தியடிகளின் அஸ்தி பீடம், காந்தி குடில், நூலகம், காந்தியக் கல்வி மையம், கதர் நிலையம் முதல் பல்வேறு பிரிவுகளும் இவ்வளாகத்தில் இயங்கி வருகிறது. உலகளவிலான காந்திய ஆராய்ச்சி மையம் விரைவில் அமைய உள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காந்தி மியூசியத்தின் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.6 கோடி மற்றும் வளாகத்திற்குள் சாலை, குடிநீர், கழிப்பறை வசதிகள், ஆடிட்டோரியம் சீரமைப்புக்கு ரூ.4.25 கோடி என மொத்தம் ரூ.10.25 கோடி வழங்கினார். இதன் மூலம் தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது குறித்து காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் கூறுகையில், ‘மாநில பொதுப்பணித்துறையின் ஹெரிடேஜ் பிரிவு அரண்மனைக்கான அடையாளப் பழமை மாறாமல் காந்தி மியூசிய மையக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
காந்தி மியூசியத்தில் கீழ்பகுதியில் தொடுதிரைகள், மேற்பகுதியில் ஆடியோ, வீடியோ அரங்குகள் உள்ளிட்ட நவீன டிஜிட்டல் வசதி அமைக்கும் பணி நடந்து வருகிறது. குறிப்பிட்ட தலைப்பை அழுத்தினால், அதன் முழுவிபரமும் தொடுதிரையில் பெறலாம். இரு அரங்குகளில் கருவிகள் அமைத்து காந்தியடிகளின் வரலாற்றுக் காட்சிகள் ஒளிபரப்பப்படும். சீரமைத்த நூலகத்தில் புத்தகங்களை விரைந்து தேர்ந்தெடுத்து, வசதியோடு அமர்ந்து படிக்கலாம். சாலை, கழிப்பறை பணிகள் நடந்து வரும் நிலையில், திறந்தவெளி ஆடிட்டோரியத்தில் தரைப்பகுதி, மேடையை அழகுபடுத்துததல் உள்ளிட்ட பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு, விரைவில் திறப்பு விழா காண இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.