மதுரையில் நாளை முதல் 4 நாள் நடக்கும் எடப்பாடி பிரசாரத்தின்போது எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கமிஷனர், எஸ்பியிடம் மனு
மதுரை: மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன், மதுரை எஸ்பி அரவிந்திடம் 108 ஆம்புலன்ஸ் தொமுச ஊழியர்கள், நேற்று வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆக.18ல் வேலூர் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது நோயாளியை ஏற்றிச் செல்வதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அங்கு கூடி இருந்த அதிமுகவினர் ஓட்டுநரையும், ஆம்புலன்சையும் தாக்கினர். இதன் தொடர்ச்சியாக ஆக.24ல் திருச்சி மாவட்டம், துறையூரில் நடந்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு கூட்டத்தில் அதிமுக கட்சிக்காரர் மயங்கி விழுந்ததாக அழைப்பு வந்ததால் அவரை மீட்பதற்கு சென்ற ஆம்புலன்சை அதிமுகவினர் தாக்கி சேதப்படுத்தினர்.
டிரைவரையும், கர்ப்பமாக இருந்த பெண் மருத்துவ உதவியாளரையும் தாக்கினர். எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தின் போது 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சூழலால் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, சாலைகள் அமைந்துள்ள பகுதியில் அவரது பிரசார கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது. மதுரை மாவட்டத்தில் செப்.1 முதல் செப்.4 வரை அவர் பிரசாரத்தில் ஈடுபடுவதால், அப்பகுதியில் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்சிற்கும், அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
* நடவடிக்கை எடுக்க மனு
விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று அளித்த மனுவில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்குவதோடு, கொலை மிரட்டல் விடுத்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை தாக்கிய அதிமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் கூறப்பட்டுள்ளது.