மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மதுரை மேயரின் கணவர், உதவி ஆணையர் கைது
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் 4.12 லட்சம் சொத்து வரி செலுத்தும் கட்டிடங்கள் உள்ளன. இதில் சுமார் 3 லட்சம் கட்டிடங்கள் வரை வணிகக் கட்டிடங்களும் உள்ளன. மாநகராட்சி கமிஷனராக தினேஷ்குமார் இருந்தபோது திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதில், 2022, 2023 காலகட்டத்தில் பல கோடி ரூபாய் வரை வரி வசூலில் வருவாய் இழப்பு மற்றும் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இவ்வழக்கை டிஐஜி அபிநவ்குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இக்குழுவினர் சொத்து வரி குழுத்தலைவராக இருந்த விஜயலட்சுமியின் கணவரான கண்ணனை காவலில் எடுத்து விசாரித்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், இந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதில், தற்போது தூத்துக்குடியில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் (57), மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன்.வசந்த் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
தூத்துக்குடி மாநகராட்சியில் தற்ேபாது உதவி கமிஷனராக பணியாற்றும் சுரேஷ்குமார், மதுரை மாநகராட்சி மண்டலம் 3ல் உதவி கமிஷனராக கடந்த ஆண்டு பணியாற்றியபோது, பிரபல தனியார் ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு வரியை குறைத்து நிர்ணயம் செய்து முறைகேடு செய்ததும் உறுதியானது. மதுரை மாநகராட்சியில் பணிபுரிந்தபோது, தலைமை கணக்கு அதிகாரி பொறுப்பு பணியையும் இவர் கூடுதலாக கவனித்து வந்துள்ளார்.
அதேநேரம் பொன்.வசந்த் சென்னையில் பதுங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒரு குழுவினர் சென்னைக்கும், ஒரு குழுவினர் தூத்துக்குடிக்கும் கிளம்பி சென்றனர். இதையடுத்து சுரேஷ்குமாரை நேற்று முன்தினம் மதுரைக்கு அழைத்து வந்து மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். சாதாரண உதவியாளராக பணியில் சேர்ந்து, உதவி கமிஷனர் வரை உயர்ந்துள்ள இவரது சர்வீஸ் ரெக்கார்டு புக் மாயமானது குறித்தும் விசாரணை நடந்தது.
விசாரணைக்கு பின் நேற்று காலை சுரேஷ்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதேபோல் நேற்று மாலை சென்னையில் பதுங்கியிருந்த பொன்.வசந்தையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதன்மூலம் மாநகராட்சி வரி வசூல் முறைகேடு வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. போலீசாரின் விசாரணையில் கண்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் அதிமுகவைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களிடமும் விசாரணை நடைபெற உள்ளது.