மதுரை உள்பட 3 மாவட்டங்களில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு உருவாக்கப்படும்: மின்வாரியம் தகவல்
சென்னை: மதுரை உள்பட 3 மாவட்டங்களில் மின்கலை ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை உருவாக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை ஊக்குவிக்க தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி நிறுவனத்தையும் தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
அதன்படி, வரும் 2030க்குள் கூடுதலாக 100 பில்லியன் யூனிட் எனும் அளவு மின்சாரத்தை சூரிய மின்சக்தி, காற்றாலை ஆகியவற்றுடன் சேர்த்து வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாய்ப்புகளான நீரேற்று மின் திட்டங்கள், மின்கல சேமிப்பு திட்டங்கள், உயிரி ஆற்றல் மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாகவும் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் 1500 மெகாவாட் திறனில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்த தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி நிறுவனம் டெண்டர் கோரி கடந்த ஜூன் மாதம் அதற்கான நிறுவனங்களை இறுதி செய்து அப்பணிகள் என்பது நடந்து வருகின்றன. இந்தநிலையில் மேலும், கூடுதலாக 1500 மெகாவாட் திறனில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பதற்கான முடிவு மின்வாரியத்தால் எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை திறம்பட பயன்படுத்தும் வகையிலும், உபரியாக உள்ள மின்சாரத்தை சேமித்து மின் தேவை அதிகமாக உள்ள நேரங்களில் பயன்படுத்தும் வகையிலான மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பை உருவாக்க திட்டமிட்டோம். அதன்படி, முதற்கட்டமாக அதில் 1500 மெகாவாட் திறனிற்கு மட்டும் அனுமதி அளித்துள்ளதால் அதற்கான டெண்டரை அறிவித்துள்ளோம். இதற்காக மதுரை, கோவை மற்றும் திருச்சி மாவட்டங்களில் இடங்களை தேர்வு செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
