மதுரை மீனாட்சி கோயிலில் இன்று பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் இன்று பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், சிவபெருமானின் திருவிளையாடல்களை விளக்கும் ஆவணி மூலத்திருவிழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் இறைவனின் 11 திருவிளையாடல்கள் லீலைகளாக நடத்தப்பட்டு வருகின்றன. விழாவின் 6ம் நாளான இன்று காலை 10 மணிக்கு மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில், பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடைபெற்றது.
இது குறித்து பட்டர்கள் கூறியதாவது: குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற வயதான வாள்வித்தை குரு வாழ்ந்து வந்தார். அவரது மாணவர்களில் சித்தன் என்பவர் தீய குணம் கொண்டவர். அவர் வாள்வித்தை பயிற்சி முடித்துவிட்டு, புதிதாக வாள்வித்தை பயிற்சி பள்ளி ஆரம்பித்தார். மேலும் சித்தன், தனது குருவின் மனைவியிடமே தவறாக நடக்க முயன்றார். இது குறித்து குருவின் மனைவி இறைவன் சோமசுந்தரரிடம் முறையிட்டார்.
இதையடுத்து இறைவன் சோமசுந்தரர், வாள்வித்தை குரு வேடத்தில் சென்று, சித்தனை போருக்கு அழைத்தார்.குருவின் மனைவியை நினைத்த மார்பு, பேசிய நாக்கு, தொட்ட கைகள், கண்ட கண்கள் என ஒவ்வொரு அங்கமாக சித்தனை வெட்டினார் சிவபெருமான். இறுதியில் சித்தனின் தலையையும் வெட்டிக் கொன்றார். இறைவனே குரு வடிவில் வந்து நிகழ்த்திய திருவிளையாடலை அறிந்த குலோத்துங்க பாண்டிய மன்னன், பாணனுக்கு தக்க மரியாதை செய்து கெளரவித்தார்.
இந்த நிகழ்ச்சி, பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடலாக நடத்தப்படுகிறது. இவ்வாறு கூறினர்.
இந்த திருவிளையாடல் நிகழ்ச்சியில் கைகளில் வாள், கேடயம் ஏந்தி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினார். மீனாட்சி அம்மனும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். அர்ச்சகர் ஒருவர், இறைவன் வேடம் பூண்டு கைகளில் வாளுடன் சித்தனை போருக்கு அழைப்பது, அங்கம் வெட்டுதல் உள்ளிட்ட திருவிளையாடல்களை நடத்தி காட்டினார். திருவிளையாடல் முடிந்த பிறகு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடலை தொடர்ந்து இரவு சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை நடைபெறுகிறது. நாளை காலை வளையல் விற்ற லீலையும், இரவு சுவாமிக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.