மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து ஆவணங்களை தாக்கல் செய்க: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருத்தொண்டர்கள் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மற்றும் அதன் உப கோயில்கள் சொத்துகளை மீட்டு பாதுகாக்கவும், கோயில் புதுப்பிப்பு பணிகளை முடித்து விரைவில் குடமுழுக்கு விழா நடத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கோயில் சொத்துக்களை மீட்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில் குடமுழுக்கு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மிகப்பெரிய கோயில் என்பதால் குடமுழுக்கு பணிகள் குறித்து பல்வேறு நிபுணர்களின் ஆலோசனையை பெற்று முறையாக ஆகம விதிகளை பின்பற்றி நடத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘கோயில் சொத்துகள் தொடர்பான விபரம் தெளிவானதாக இல்லை. இது தொடர்பான இணை ஆணையரின் அறிக்கையில் திருப்தி இல்லை’’ என்றனர். கோயில் தரப்பில், ‘‘எங்கெங்கு ஆக்கிரமிப்பு உள்ளது என்பது குறித்து மனுதாரர் தரப்பில் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரர் குறிப்பிட்டு சொன்னால்தான் தெரியுமா? கோயிலின் சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் உங்களிடம் இருக்கையில், நீங்களே அதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாமே? மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துகள் தொடர்பான ஆவண பதிவேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை அக். 7க்கு தள்ளி வைத்தனர்.