மதுரையில் கடத்தப்பட்ட மாணிக்கவாசகர் உலோக சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் திருநெல்வேலியில் மிட்பு
திருநெல்வேலி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் இரண்டு எதிரிகளை கைது செய்து ஒரு மாணிக்கவாசகர் உலோக சிலையை மீட்டுள்ளனர். ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்புபிரிவின் திருநெல்வேலி சரக ஆய்வாளர் வனிதாராணி, மற்றும் உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ் , பெர்லின் பால் , முத்து ரஜினி காந்த் சகிதம் 10.10.2025 அன்று மாலை மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, செல்லம்பட்டி கிராமத்தில் வாகன தணிக்கை செய்தனர்.
அந்த குழுவினர் TN 58 9372 ஹோண்டா டிரிம்நியோ என்ற வாகனத்தை தணிக்கை செய்து அந்த வாகனத்தில் இருந்த பையை சோதனை செய்ததில் ஒரு அடி உயரத்தில் மூன்றரை கிலோ எடை அளவு கொண்ட மாணிக்கவாசகர் சிலை ஒன்று இருப்பது தெரியவந்தது.
அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் காசிமாயன் வெள்ளக்காரப்பட்டி, பாப்பாபட்டி போஸ்ட் உசிலம்பட்டி தாலுகா என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் சோலை, வேல்முருகன், மதன் ஆகியோருடன் இணைந்து உசிலம்பட்டியில் ஆனையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி கோயிலில் இருந்த மாணிக்கவாசகர் உலோக சிலையை திருடியதாக ஒப்புக்கொண்டார்.
எதிரி காசிமாயன் அந்த சிலையை விற்க முயற்சி செய்தும் தோல்வி அடைந்துள்ளார். அதனால் அவர் உசிலம்பட்டி தாலுகா, பாப்பாபட்டியை சேர்ந்த தவசி என்பவரை அணுகியுள்ளார். இந்த சிலையை விற்க காசிமாயனும் தவசியும் சம்பவ இடத்தில் சிலையை வாங்க இருந்த முகவருக்காக காத்திருந்த சமயத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து குற்றத்தில் தொடர்புடைய எதிரிகள் காசிமாயன் மற்றும் தவசி ஆகியோரை கைது செய்து ஒரு மாணிக்கவாசகர் உலோக சிலையையும் ஒரு இரண்டு சக்கர வாகனத்தையும் மீட்டுள்ளனர்.
சிலை கடத்தல் தடுப்புபிரிவின் திருநெல்வேலி சரக ஆய்வாளர் வனிதாராணி வழக்குபதிவு செய்து, சிலை கடத்தல் தடுப்புபிரிவின் திண்டுக்கல் சரக ஆய்வாளர் பொறுப்பு மதுரை சரகம் சத்தியபிரபாபுலன் விசாரணைக்காக எடுத்துக் கொண்டார். இந்த குற்றத்தில் ஈடுப்பட்ட மற்ற எதிரிகளை கைது செய்ய மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் டி. கல்பனா நாயக் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் குழுவினரை வெகுவாக பாராட்டினார்