மதுரை கிழக்கு தொகுதியில் புதிய நியாய விலைக் கடைகள்
*அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்
மதுரை : மதுரை கிழக்கு தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட நியாய விலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, அமைச்சர் பி.மூர்த்தி நேற்று திறந்து வைத்தார்.
மதுரை கிழக்கு தொகுக்கப்பட்ட கிழக்கு ஒன்றியம் ஒத்தக்கடை கூட்டுறவு நகர கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஒத்தக்கடை முழுநேர நியாய விலைக்கடையில் 1703 குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் ஒரே இடத்தில் பொதுமக்கள் குடிமைப் பொருள் வாங்க வருவதால் ஏற்படும் இடர்பாடுகளை குறைக்கும் வகையில், ஒத்தக்கடை சீதாலட்சுமி நகர் பகுதியில் 400 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யும் வகையில் தனியாக நியாய விலைக்கடை அமைக்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 13.56 லட்சம் மதிப்பீட்டில் இதற்கான கட்டிடம் கட்டப்பட்டது. இந்த புதிய நியாய விலைக்கடையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து கொடிக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வந்த சிட்டம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம், 492 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் ரூ.9.97 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இதனையும் நேற்று அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுகளுக்கு கலெக்டர் பிரவின் குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சதீஷ்குமார், செயற்பொறியாளர் இந்துமதி, உதவி செயற்பொறியாளர் அழகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், முன்னாள் ஒத்தக்கடை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அ.பா.ரகுபதி, முன்னாள் மாவட்ட ஊராட்சி சேர்மன் சூரியகலா கலாநிதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வடிவேல் முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகேஸ்வரி சரவணன், அண்ணாமலை, கிழக்கு ஒன்றிய ஆணையாளர்கள் கதிரவன், ஜோதிராஜ், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் பாலாண்டி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.