ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ரயில் நிலையங்களில் மதுைர கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு
ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர், ஆறுமுகநேரி ரயில் நிலையம் விரைவில் மேம்படுத்தப்படும் என உறுதியளித்தார். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ரயில் நிலையத்திற்கு தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, மூத்த வர்த்தக மேலாளர் தினேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் தனி ரயில் மூலம் நேற்று வருகைதந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆறுமுகநேரி ரயில் நிலையம் விரைவில் மேம்படுத்தப்படும் என கோட்ட மேலாளர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து ரயில்நிலையத்தை முழுமையாகப் பார்வையிட்ட கோட்ட மேலாளர், புதிய கட்டிடம், 4வது நடைமேடை அருகே சுவர் அமைப்பது, கோச் இன்டிகேட்டர், 2வது நடைமேடைக்கான மேற்கூரை, சிசிடிவி கேமரா மற்றும் உயர் மின்கோபுர மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அங்குள்ள ஒரு குழாயில் தண்ணீர் வராததை கண்ட கோட்ட மேலாளர் அதை உடனடியாக சரிசெய்யுமாறு அறிவுறுத்தினார்.
முன்னதாக கோட்ட மேலாளரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் கியாலிராம் மீனா, நிலைய அதிகாரி வனராஜ், ஆறுமுகநேரி ரயில்வே வளர்ச்சிக் குழுவின் தலைவர் தங்கமணி, செயலாளர் அமிர்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் வரவேற்றனர். ஆய்வின் போது ரயில்வே வளர்ச்சி குழு நிர்வாகிகளான சுகுமார், சீனிவாசன், கவுன்சிலர் சிவகுமார், சிவராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதேபோல் காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கோட்ட மேலாளரிடம் காயல்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு அதிக அளவில் செல்லும் மக்கள் நலன்கருதி திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு கூடுதலாக கார்ட் லைனில் நேரடி விரைவு ரயில் இயக்க வேண்டும் மற்றும் ரயில் நிலைய வளர்ச்சித்திட்டப் பணிகள் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காயல்பட்டினம் ரயில் நிலைய பயணிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
அப்போது காயல்பட்டினம் ரயில் நிலைய பயணிகள் சங்கச்செயலாளர் மன்னர் பாஜுல் அஸ்ஹாப், துணைத்தலைவர்கள் சர்குரு, ராமசந்திரன், துணைச் செயலாளர்கள் கண்ணன், காதர் சாஹிப், சதக்தம்பி, நவ்பல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.