மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் ராஜினாமாவை ஏற்பதாக மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல்..!!
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் ராஜினாமாவை ஏற்பதாக மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின் மேயராக இருந்த இந்திராணி இரண்டு தினங்களுக்கு முன்பாக குடும்ப சூழலை காரணம்காட்டி தான் ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில், மாநகராட்சி சார்பாக அவருடைய உறவினர்கள் கைது செய்யப்பட்டு, அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே மேயரின் கணவர் பொன் வசந்த் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மேயர் தன்னுடைய குடும்ப சூழலை காரணம் காட்டி தான் ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முறைப்படி இவரது ராஜினாமா ஏற்பது குறித்த அவரச மாநகராட்சி கூட்டம் இன்று துணை மேயர் நாகராஜன் தலைமையில், மதுரை மாநகராட்சி மன்றத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சித்திரா விஜயன் இதில் கலந்து கொண்டு கூட்டத்தை நடத்தினர். கூட்டம் துவங்குவதற்கு முன்பாகவே அதிமுகவினர் மேயர் ராஜினாமாவை தாங்கள் வரவேற்பதாக கூறிய உடன் திமுகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே மன்றத்தில் மேயர் ராஜினாமா ஏற்பது குறித்த தகவல் தீர்மானமாக வைக்கப்பட்டது . இந்த தீர்மானத்தை ஏற்பதாக அனைவரும் தெரிவித்திருப்பதை தொடர்ந்து. மேயரின் ராஜினாமா முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது . இனி அடுத்தகட்டமாக புதிதாக மேயரை தேர்தெடுப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் அதற்கு பின்பாக புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.