மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்களை ஒரு மணிநேரத்தில் அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு!!
மதுரை: மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்களை ஒரு மணிநேரத்தில் அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாகையைச் சேர்ந்த அருளரசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருத்தார். அந்த மனுவில், தமிழகத்தில் அனுமதி பெறாமல் பல்வேறு இடங்களிலும், சாலையோரங்களிலும், சாலை நடுவிலும் பேனர்கள், பதாகைகள், கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பல்வேறு நேரங்களில் பேனர்கள், கொடிக்கம்பங்கள் சாய்வதால் விபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. எனவே இவற்றை அகற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், அனுமதியின்றி பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைப்பது சட்டவிரோதம். எனவே தமிழகத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வீராகதிரவன், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர்கள், கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், அனுமதி இல்லாத இடங்களில் பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைக்கவும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, மதுரை மாநகரம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் பார்த்திருக்கிறோம். அதை ஏன் அகற்றவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி மதுரை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏராளமான கொடிக் கம்பங்கள், பேனர்கள் உள்ளன. நேரில் ஆய்வு செய்ய நாங்கள் தயார் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து மதுரையில் உள்ள அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்களை ஒரு மணிநேரத்தில் அகற்ற வேண்டும். பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து அறிக்கை அளிக்க மதுரை காவல் ஆணையருக்கு ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து, இந்த வழக்கு விசாரணை ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.