மதுரை ஆதினத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவு அக்.27 வரை நீட்டிப்பு
மதுரை : மதுரை ஆதினத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவு அக்.27 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மத மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றார் மதுரை ஆதீனம். இந்நிலையில், கார் விபத்து விவகாரத்தை மத ரீதியாக சித்தரித்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதீனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், "மதுரை ஆதீனம் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் விதமாக சர்ச்சையாக பேசியதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மதுரை ஆதினம் விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை."இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மதுரை ஆதினத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவு அக்.27 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் விசாரணை நிலை குறித்து காவல்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டது.