சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து ஊட்டி, கொடைக்கானலில் தீவிர இ-பாஸ் சோதனை: பல கிமீ தூரம் வாகனங்கள் அணிவகுப்பு; கூடுதல் கவுன்டர்கள் திறப்பு
எனவே, மலைப்பிரதேசங்களுக்கு வந்து செல்லும் சுற்றுலா வாகனங்கள் பற்றிய உன்மையான கணக்கீடுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கலெக்டர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று கொடைக்கானலுக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சோதனையிடப்பட்டன. இ-பாஸ் பெற்ற வாகனங்களுக்கு மட்டும் நகருக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த தீவிர சோதனை காரணமாக கொடைக்கானலில் நேற்று பல கி.மீ. தூரத்திற்கு சுற்றுலா வாகனங்கள் காத்திருந்து நகருக்குள் சென்றன. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நேற்று நடந்தது.
இதேபோல், நீலகிரியின் நுழைவாயிலான மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு சோதனைச்சாவடியில் நேற்று முதல் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்து வருகின்றதா? என அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஊட்டி கல்லாறு சோதனைச்சாவடியில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்று இ-பாஸ் சோதனைக்கு பின்னரே நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகளுக்கு சோதனைச்சாவடியிலேயே ஊழியர்கள் அவர்களது ஆன்ட்ராய்டு போன் மூலம் பதிவு செய்ய உதவுகின்றனர். இ-பாஸ் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் குன்னூர் மலைப்பாதையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், இபாஸ் கண்காணிப்புக்காக அனைத்து சோதனை சாவடிகளிலும் தானியங்கி கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும் என்று தெரிவித்தார்.