ஒரு லட்சம் பேருக்கு நோயை பரப்பும் ‘மெட்ராஸ் ஐ’யுடன் இசைவிழாவில் பங்கேற்ற பிரபலம்: இங்கிலாந்து மக்கள் கொந்தளிப்பு
லண்டன்: தொற்றுநோயான ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்புடன் பொது நிகழ்ச்சிக்குச் சென்ற பெண் பிரபலம் ஒருவருக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்தைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலமான மடலின் வொயிட் ஃபெடிக், தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாட, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோவில் நடைபெற்ற மாபெரும் இசை விழாவுக்குச் சென்றுள்ளார். சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற அந்த விழாவிற்குச் செல்வதற்கு முன், தனக்கு ‘மெட்ராஸ் ஐ’ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அவர் தனது டிக்டாக் வீடியோவில் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவரது கண்கள் சிவந்து வீங்கிய நிலையில் காணப்பட்டன. அந்தப் பதிவில், ‘ஹாலோவீன் பண்டிகைக்காக தனது கணவர் பயன்படுத்திய இரண்டு டாலர் மலிவான மேக்கப் மூலமாக இந்த தொற்று தனக்கு பரவியது.
மெட்ராஸ் ஐ இவ்வளவு தீவிரமாக தொற்றும் நோய் என்பது எனக்குத் தெரியாது’ என்று அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து இணையத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பயனர்கள் பலரும் அவரது செயலை ‘வெறுக்கத்தக்க, சுயநலமான மற்றும் பொறுப்பற்ற செயல்’ என்று கடுமையாக விமர்சித்தனர். சுகாதாரப் பணியாளர்கள் உட்பட பலர், மெட்ராஸ் ஐ எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்றுநோய் என்றும், இவ்வளவு பெரிய பொது நிகழ்வில் கலந்துகொள்வது ஆயிரக்கணக்கானோருக்கு நோயைப் பரப்பும் அபாயத்தை உருவாக்கும் என்றும் எச்சரித்தனர்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த மடலின், ‘மெட்ராஸ் ஐ நோயின் தீவிரம் குறித்த கண்ணோட்டம், அமெரிக்காவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே உள்ள கலாசார வேறுபாடாக இருக்கலாம். இங்கிலாந்தில், மக்கள் கைகளைக் கழுவி, கண்களைத் தொடாமல் இயல்பாக தங்கள் பணிகளைத் தொடர்வார்கள். இதற்காக யாரும் பள்ளி அல்லது வேலைக்கு விடுப்பு எடுப்பதில்லை’ என்று விளக்கம் அளித்தார். ஆனால், வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் மெட்ராஸ் ஐ மிகவும் எளிதில் பரவக்கூடியது என்றும், அதைக் கட்டுப்படுத்த சிறந்த சுகாதாரம் அவசியம் என்றும் மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.