சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீராம் ராஜஸ்தானுக்கு மாற்றம்
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவை சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் மாற்றம் செய்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, கடந்த 1964ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பிறந்தார். 2009ம் ஆண்டு சட்டீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 2021ம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள பட்டு தேவானந்தை மீண்டும் அவரது சொந்த மாநிலமான ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கே பணியிட மாற்றம் செய்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிபதி பட்டு தேவானந்த் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள விவேக் குமார் சிங்கை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து இவர் 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.