சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னையின் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னையின் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய இடங்களான அமெரிக்க தூதரகம், ஐகோர்ட்டில் அமைந்துள்ள சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி நடத்தினர்.
மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு வரும் பொதுமக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர். ஏற்கனவே 4 முறை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டள்ளது. இதே போல் உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து நீதிமன்ற பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு ஒன்றிய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஐகோர்ட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் கடிதத்தில் அமெரிக்க தூதரகம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றங்களில் ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து நீதிமன்றங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது எந்த ஒரு வெடிபொருளும் சிக்காத நிலையில் இது புரளி என்பது தெரியவந்தது.