நாங்கள் பைத்தியமா? கட்சியை கலைத்து விடுவேன்: சீமான் திடீர் பரபரப்பு
திருக்காட்டுப்பள்ளி: ‘நாங்கள் பைத்தியமா? நாம் தமிழர் கட்சியை கலைந்து விடுவேன்’ என்று சீமான் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூரில் நாம் தமிழர் கட்சியின் தண்ணீர் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. அதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: நாங்கள் முன்னெடுக்கும் நிகழ்வுகளை பைத்தியம் என்பது போல, இங்குள்ள பல பைத்தியங்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
நாங்கள் பைத்தியங்கள் அல்ல. பைத்தியங்களாக உள்ளவர்களுக்கு வைத்தியம் பார்க்க வந்த வைத்தியர்கள். சீமான் மரத்துடன் பேசுகிறார். அதற்கு என்ன ஓட்டு இருக்கிறதா என்கிறார்கள். மரத்திற்கு ஓட்டு அல்ல, உயிர் இருக்கிறது. தண்ணீரிடம் வாக்கு இல்லை. வாழ்க்கை இருக்கிறது என்பதற்காக தான் தண்ணீருக்கு மாநாடு. யாரும் எங்களுக்கு போட்டி அல்ல. நாம் தமிழர் எடுத்து வைக்கும் அரசியலின் அருகே வர இங்குள்ளவர்களுக்கு அரை நுாற்றாண்டு ஆகும்.
எங்கள் அரசியல் வேறு, உங்கள் அரசியல் வேறு. மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரும். ஐரோப்பிய நாடுகளில் தண்ணீரை யார் அதிகமாக வைத்து உள்ளார்களோ அந்த நாடுகள்தான் பணக்கார நாடுகள் என்கிறார்கள். ஐரோப்பிய நாடுகள் நீர் பொருளாரத்திற்கு வந்து விட்டன. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்ததால், தண்ணீர் விற்பனைக்கு தடை. நான் எடுத்துள்ள கருத்தியலில் வென்றால், கட்சியை கலைத்து விடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.