மத்திய பிரதேச பாஜகவில் கோஷ்டி பூசல்; ஒன்றிய-மாநில அமைச்சர்கள் மோதல்
குவாலியர்: நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த மத்திய பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த 2020ம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும், ஒன்றிய அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும், குவாலியர் பகுதி பாஜகவில் மூத்த நிர்வாகிகள் மற்றும் சிந்தியாவின் ஆதரவாளர்கள் இடையே அதிகாரப் போட்டி நிலவி வந்தது.
இந்த உட்கட்சிப் பூசல் தற்போது வெளிச்சத்திற்கு வந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், குவாலியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில அமைச்சர்கள் சிலரை சிந்தியா காக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கூட்டம் தொடங்கியதும் சிந்தியாவிற்கும், மாநில அமைச்சர் ஒருவருக்கும் இடையே வெளிப்படையாக வாக்குவாதம் மூண்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து மாநில அமைச்சர்கள் பலர் சிந்தியா முன்பாகவே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். தனது ஆதரவாளர்களாகக் கருதப்படும் குவாலியர் - சம்பல் பகுதி அமைச்சர்களையே சிந்தியா கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்தச் சம்பவங்கள், குவாலியர் பாஜகவில் நிலவி வந்த கோஷ்டிப் பூசலை வெளிக்காட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.