மதுராந்தகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை: சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
செங்கல்பட்டு: மதுராந்தகம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று (05-10-2025), மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய "சக்தி" தீவிர புயல், தெற்கு திசையில் நகர்ந்து இன்று (06-10-2025) காலை 05.30 மணி அளவில் வலுகுறைந்து புயலாக அதே பகுதிகளில் நிலவியது. இது மேலும் தெற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கு-தென்மேற்கே சுமார் 940 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது மேலும் கிழக்கு தென்கிழக்கே மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து. 07-10-2025 (நாளை) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுகுறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், பாடலு, கருங்குழி, உப்பத்தூர் ஆகிய பகுதிகளில் திடீரென வானம் இருண்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.
காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது, ஆனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு முன்பு இருள் சூழ்ந்து மழை தொடங்கியுள்ளது. கடந்த நான்கு, ஐந்து நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. இந்த மழையினால் வெப்பம் தணிந்துள்ளது.. மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம் பகுதிகளில் தற்போது இருள் சூழ்ந்து காணப்படுகிறது.