மாதவரம் லாரி நிறுத்தம் மையத்தில் கால்வாய் மீது தடையாக இருந்த மின்சார பில்லர் அதிரடி அகற்றம்
மாதவரம்: சென்னை மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள சிஎம்டிஏ லாரி நிறுத்த மையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்கிறது. இங்குள்ள பழைய மழைநீர் கால்வாய் மீது மின்சார பில்லர் இருந்ததால் அங்கு புதிய மழைநீர் கால்வாய் அமைக்க முடியாமல் பணிகள் பாதியில் முடங்கியது. இதனால் மழைநீர் கால்வாய்க்குள் போகமுடியாமல் லாரி நிறுத்த மையத்தில் உள்ள காலி இடத்தில் குளம்போல் தேங்கி நின்றதால் லாரிகள் சென்று வருவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதுசம்பந்தமாக நேற்று முன்தினம் தமிழ்முரசு நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து மாதவரம் மின்சாரவாரிய அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் மீது இருந்த மின்சார பில்லரை அகற்றி வேறிடத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இதையடுத்து உடனடியாக அந்த பகுதியில் மழைநீர் கால்வாய் பணி துவங்கப்பட்டு சாலையில் தேங்கியிருந்த மழைநீரும் அகற்றப்பட்டது. உதவி பொறியாளர் சரவணனமூர்த்தி தலைமையில், ஊழியர்கள் இந்த பணியை செய்து முடித்துள்ளனர்.