100ல் 100 ரன் மிஷின் சாதிப்பாரா?
மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்துள்ளது ரசிகரக்ளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் ‘சதங்களின் ராஜா’ என அழைக்கப்படும் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 84 சதங்களை (ஒருநாள் போட்டிகளில் 53) அடித்துள்ள அவர் இன்னும் 16 சதங்களை எடுத்தால் நூறு சதங்களை எட்டி மகத்தான சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
2027 உலகக் கோப்பை வரை அவர் விளையாடினால் சுமார் 40 போட்டி வாய்ப்புகள் உள்ளன. 2027 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோலி 11 போட்டிகள் வரை விளையாட முடியும். ஒருவேளை இந்தியா சீக்கிரமே வெளியேறினால் குறைந்தபட்சம் 6 போட்டிகள் விளையாட முடியும். இதில் உறுதிப்படுத்தப்பட்ட போட்டிகளை மட்டும் சேர்த்தாலே 18 ஒருநாள் போட்டிகள், 11 உலகக் கோப்பை போட்டிகள் என விராட் கோலி இன்னும் 16 சதங்கள் அடிக்க 29 வாய்ப்புகள் உள்ளன என்று அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
* திரிபுராவை வீழ்த்தியது தமிழ்நாடு
அகமதாபாத்: சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடர் அகமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ நகரங்களில் நடக்கிறது. அகமதாபாத்தில் ேநற்று நடந்த போட்டியில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - திரிபுரா அணிகள் மோதின. டாஸ் வென்ற திரிபுரா பந்துவீச்சை தேர்வு செய்தது. தமிழக அணி 26 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ஜெகதீசன் - சாய் கிஷோர் ஜோடி நிலைத்து நின்று ஆடினர். இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இந்த ஜோடி 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஜெகதீசன் 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சாய் கிஷோர் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தமிழக அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. திரிபுரா தரப்பில் சவுரப் தாஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய திரிபுரா அணி ஆரம்பம் முதலே தமிழக பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. 18.5 ஓவர்களில் 143 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழக அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. திரிபுரா தரப்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 39 ரன்கள் அடித்தார். தமிழக அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங், நடராஜன் மற்றும் சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.