மபி, ராஜஸ்தானில் 11 குழந்தைகள் பலி 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு இருமல் மருந்து வழங்க தடை: ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு
போபால்: மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த 11 குழந்தைகள் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து 2 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து பரிந்துரை செய்ய ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி சிந்த்வாராவின் பராசியாவில் உள்ள குழந்தைகளிடையே காய்ச்சல் பரவி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் இருமல், சளி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கட்டாரியா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்த இருமல் சிரப் மருந்துகள் வழங்கப்பட்டன. இந்த மருந்துகளை குடித்த 9 குழந்தைகள் பலியாகி விட்டனர்.
இதில் 2 குழந்தைகள் நாக்பூரில் பலியானார்கள். இதே போல் ராஜஸ்தான் மாநிலத்திலும் மேலும் 2 குழந்தைகள் பலியானதால் இருமல் சிரப் மருந்து குடித்து பலியான குழந்தைகள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மேலும் 13 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருமல் மருந்து குடித்த இந்த குழந்தைகள் இறப்புக்கான காரணம் சிறுநீரக செயலிழப்பு என்று தெரிய வந்தது. இதையடுத்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மத்தியபிரதேச மாநில அளவிலான ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டக் குழு இந்த வழக்கை விசாரிக்க வந்தது. அவர்கள் இறந்த குழந்தைகளின் மாதிரிகள், நீர் மாதிரிகள் மற்றும் பிற தொடர்புடைய மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும் மருந்து சப்ளை செய்த கட்டாரியா பார்மாசூட்டிகல்ஸ் விநியோகஸ்தர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. ஜபல்பூரில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்திடமிருந்து இந்த சிரப் வழங்கப்பட்டது தெரிய வந்தது. அந்த பாட்டில்கள் அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பாட்டில்களை சப்ளை செய்த நியூ அப்னா ஏஜென்சி, ஆயுஷ் பார்மா மற்றும் சிந்த்வாராவில் உள்ள ஜெயின் மெடிக்கல் அண்ட் ஜெனரல் ஸ்டோர்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. கோல்ட்ரிப் என்கிற இருமல் சிரப் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
மபி, ராஜஸ்தானில் அடுத்தடுத்து 11 குழந்தைகள் பலியானதை தொடர்ந்து 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப்களை பரிந்துரைப்பதைத் தவிர்க்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப்கள் பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை என்றும் ஆலோசனையில் தெரிவித்துள்ளது. வயதானவர்களுக்கு உரிய அளவு, பயன்பாடு அடிப்படையில் இருமல் மருந்துகள் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
* சிறுநீரக பாதிப்பு ஏற்படும்
மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப்களால் குழந்தைகள் இறப்பு ஏற்பட்ட விவகாரத்தில் அங்கு பரிசோதிக்கப்பட்ட சிரப் மாதிரிகளில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாதிரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
* பிரேக் ஆயில் கரைப்பான்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மபி மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் குழந்தைகள் இறப்புக்கு இருமல் மருந்துகளில் பிரேக் ஆயில் கரைப்பான் கலப்பதே காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் குற்றம் சாட்டினார். குழந்தைகள் மரணங்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக இயந்திரத்தின் முழுமையான சீர்குலைவை பிரதிபலிக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.