ஆம்பூர் அருகே இன்று அதிகாலை சொகுசு பஸ் கவிழ்ந்து 15 பயணிகள் படுகாயம்
ஆம்பூர்: ஆம்பூர் அருகே இன்று அதிகாலை சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பயணிகள் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கோவைக்கு நேற்றிரவு ஒரு தனியார் சொகுசு பஸ் பயணிகளுடன் சென்றது. இந்த பஸ் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அப்பகுதியில் மேம்பால கட்டுமான பணிக்காக கொட்டி வைத்துள்ள மண் குவியல் மீது மோதி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்தவர்கள் அலறினர். இந்த சத்தம் கேட்ட அப்பகுதியினர் அங்கு ஓடி வந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார், நெடுஞ்சாலை ரோந்து பணியினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பஸ்சில் படுகாயமடைந்த 15 பயணிகளை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் உதவியால் சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த சொகுசு பஸ்சை மீட்டனர். இந்த விபத்து காரணமாக சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 3 கி.மீ தூரம் வாகனங்கள் வரிசையில் நின்றது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.