காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகுகிறது கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானி செந்தாமரை கண்ணன் கூறியதாவது: வரும் 18ம் தேதி (நாளை) வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 16 செ.மீ.மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.