கடலோரத்தில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது: 3 மாவட்டத்தில் மழை நீடிக்கும்
சென்னை: வட தமிழகத்தில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவிழந்தது. இதனால், தமிழகத்தில் 3 மாவட்டத்தில் மட்டும் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக மழை பெய்து வருகிறது. மேலும், வட தமிழகம்- புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகப் பகுதிகளில் வலுவிழந்த நிலையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.
இதன் காரணமாக நேற்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. சென்னை அடுத்த மணலி புதுநகர் பகுதியில் அதிகபட்சமாக 240 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று மேலும் வலுவிழந்தது. இது தவிர தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை மழை பெய்யும். தவிர, 6ம் தேதி முதல் 10ம் தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. சென்னையில், இன்றும் ஓரளவுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.