குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா மற்றும் தெற்கு கடலோர ஆந்திரா ஆகிய பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழை வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக, வியாழக்கிழமை முதல் வரும் அக்டோபர் 20ம் தேதி (திங்கட்கிழமை) வரை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, அடுத்த சில நாட்களுக்கு மழைப்பொழிவு நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூததுக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, ராமநாதபுரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.