சென்னை விமான நிலையத்தில் குறைந்தவிலை உணவகம் 6 மாதமாக மூடியே கிடப்பதால் பயணிகள் கடும் அவதி
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், மெட்ரோ ரயில் நிலையத்தின் தரைதளத்தில், விமான நிலைய அதிகாரிகளின் உணவகம் செயல்பட்டு வந்தது. இதில், விமான நிலைய ஆணைய ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டது. மேலும் விமான நிலைய காவலர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிறுவன ஊழியர்களுக்கு ஒரு கட்டணம், தற்காலிக ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு கட்டணம், விமான பயணிகள் மற்றும் வெளியாட்களுக்கு ஒரு கட்டணம் என 4 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன. விமான நிலையத்தில் உள்பகுதிகளில் காபி, டீ, ரூ.250ல் இருந்து ரூ.360 வரை என்ற கட்டணத்துடன் ஒப்பிடுகையில் இந்த கேன்டீனில் பயணிகள், வெளியாட்கள் போன்றவருக்கு காபி ரூ.20க்கு கிடைத்தது, மிகவும் வசதியாக இருந்தது.
இதனால் பயணிகள், வெளியாட்கள், விமான நிலைய ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டம் அலைமோதியது. 24 மணி நேரம் பரபரப்பாக செயல்பட்டு வந்தது. தற்போது கேன்டீனை டெண்டர் முடிந்து விட்டதால் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் திடீரென மூடப்பட்டது. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பினர் கூறுகையில், ‘புதிதாக டெண்டர் விடும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் புதிய ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு செயல்பட தொடங்கும்’ என்றார். இதற்கிடையே இந்திய விமான நிலைய ஆணைய ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிறுவன பணியாளர்கள் ஆகியோருக்கு விமான நிலையத்தில் உள் பகுதியில் தனியாக ஒரு கேன்டீன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாது.
இதனால் பயணிகள் மற்றும் அவர்களை வழியனுப்ப, வரவேற்று அழைத்து செல்ல வருபவர்கள் மற்றும் கார், கால் டாக்சி டிரைவர்கள், வெளிப்பகுதியில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்
படுகின்றனர். இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, விமான நிலைய ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிறுவன ஊழியர்களுக்கு, விமான நிலையத்தின் உள் பகுதியில், கேன்டீன் வசதி உள்ளது. அதைப்போல் புறப்பாடு பயணிகளுக்கு, குறைந்த விலையில் டீ, காபி, நொறுக்கு தீனி, குடிநீர் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யும் கடை உள்பகுதியில் அமைத்திருக்கிறோம். இதனால் பயணிகள், மற்றும் ஊழியர்கள் பாதிப்பு அடையவில்லை’ என்றனர். இதை பயணிகள் மறுக்கின்றனர்.
பயணிகளுக்கு உள்நாட்டு முனையத்தில், டீ காபி சமோசா, குடிநீர் மட்டுமே குறைந்த விலையில் கொடுக்கப்படுகிறது. மற்ற உணவு பொருட்கள் இல்லை. அதைப்போல் சர்வதேச முன்னையத்தில் அனைத்து உணவு பொருட்களும் அதிக விலை கொடுத்து சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. பயணிகளுடன் வருபவர்கள் உள்ளே சென்று சாப்பிட முடியாது. எனவே விமான நிலைய நிர்வாகம், உடனடியாக கேன்டீனை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோருகின்றனர்.