காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடித்து வருவதை அடுத்து 27ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும், கரூர்,மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சென்னை, சேலம், திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மதுரையில் நேற்று அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் நிலவியது.
இந்நிலையில், மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய வடக்கு ஒடிசா-வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலை கொண்டுள்ளது. இது இன்று வலுக்குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 25ம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மேற்கு திசையில் நகர்ந்து 26ம் தேதி தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வட மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 27ம் தேதி கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 25ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை 27ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.