வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை வட கடலோரம் 21ம் தேதி வரை பலத்த மழை பெய்யும்
கேரளாவில் நேற்று மழை பெய்யத் தொடங்கியதால் தமிழகத்தில் நீலகிரி, வால்பாறை, மூணாறு, கோவை, திருப்பூர், தேனி, மாவட்டங்களில் மழை பெய்தது. இன்றும் கன்னியாகுமரி வரை தீவிரம் அடையும். சென்னை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
எந்த ஆண்டும் ஜூலை மாதத்தில் பெய்யாத அளவுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். திடீர் மழை பெய்யும். இந்த மழை 21ம் தேதி வரை நீடிக்கும். இந்த மாத இறுதி வரை வட கடலோர மாவட்டத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் நேற்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, நீலகிரி மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், கரூர், மதுரை, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும், சென்னை, நீலகிரி, கடலூர், கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, ராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
இதையடுத்து, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். 18ம் தேதியில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 15 செமீ முதல் 20 செமீ வரை மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மழை 22ம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளில் நீடிக்கும் வாய்ப்புள்ளது. மேலும், தமிழகம் புதுச்சேரியில் இன்று இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். சென்னையில் 100 டிகிரி வரை வெயில் இருக்கும்.