ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்தது: இந்திய வானிலை மையம்
டெல்லி : வங்கக்கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆரம்பத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. வட உள் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு உள் கர்நாடக பகுதிகளை கடந்து சென்று மேலும் வலுவிழக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அதே பகுதியில் நிலவுகிறது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.