காதல் கைகூடாததால் திருமணம் செய்யவில்லை காதலன் இறந்த அதே நாளில் நடிகை மரணம்: பாலிவுட்டில் சோகம்
மும்பை: புகழ்பெற்ற பாலிவுட் நடிகையும், பின்னணிப் பாடகியுமான சுலக்ஷனா பண்டிட், மாரடைப்பால் நேற்று காலமானார். இசையும், கலையும் நிறைந்த புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்த பாலிவுட் நடிகை சுலக்ஷனா பண்டிட் (71), கடந்த 1970 மற்றும் 1980ம் ஆண்டுகளில் இந்தி திரையுலகில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் ஒரே நேரத்தில் வெற்றி கண்ட அபூர்வ திறமைசாலியாக விளங்கினார்.
‘உல்ஜன்’, ‘ஹீரா பேரி’, ‘அப்னாபன்’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 1975ல் வெளியான ‘சங்கல்ப்’ திரைப்படத்தில் இவர் பாடிய ‘து ஹி சாகர் ஹே து ஹி கினாரா’ என்ற பாடல், இவருக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது. இவர், நடிகர் சஞ்சீவ் குமாரை தீவிரமாகக் காதலித்தார். ஆனால், சஞ்சீவ் குமார் இவரது திருமண விருப்பத்தை நிராகரித்ததால், திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மும்பையில் வசித்து வந்த சுலக்ஷனா பண்டிட், நேற்று மாரடைப்பால் திடீரென காலமானார். இந்தத் தகவலை அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான லலித் பண்டிட் உறுதிப்படுத்தியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இடுப்பு எலும்பு முறிவு காரணமாக பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட அவர், அதன்பிறகு உடல்நலம் குன்றியிருந்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நவம்பர் 6ம் தேதிதான் நடிகர் சஞ்சீவ் குமார் உயிரிழந்தார். தற்போது, அவரது 40வது நினைவு நாளிலேயே சுலக்ஷனா பண்டிட்டின் உயிரும் பிரிந்திருப்பது, பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்கு இன்று மும்பையில் நடைபெற உள்ளது.