நெல்லையில் குடும்ப தகராறில் பயங்கரம்; காதல் மனைவி கழுத்தறுத்து கொலை: கணவர் போலீசில் சரண்
நெல்லை: நெல்லை, கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரித்திகா (20). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் அன்புராஜ் (24) என்பவரும் காதலித்து வந்தனர். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டாருக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் வசித்து வந்தனர். தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட பிரச்னையால் இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். பின்னர், உறவினர்கள் சமாதானம் செய்து வைத்ததை அடுத்து, கடந்த மே மாதம் முதல் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பிரித்திகாவின் தாயார், அவர்களது குடும்ப விஷயத்தில் தலையிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அன்புராஜ், மனைவி பிரித்திகாவை சால்வையால் கழுத்தை நெரித்து, பின்னர் சமையலறை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். மனைவி இறந்ததை அறிந்ததும், அன்புராஜ் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து பஸ் மூலம் கோவில்பட்டிக்கு தப்பிச் சென்றுள்ளார். இருப்பினும், செய்த தவறை நினைத்து மனம் வேதனை அடைந்ததால், நடந்த சம்பவம் குறித்து தனது தம்பிக்கு செல்போனில் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த தம்பி, உடனடியாக தனது தந்தையிடம் தகவலைக் கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரது தந்தை அன்புராஜூக்கு அறிவுரை கூறி வரவழைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, அன்புராஜ் இன்று காலை நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு சென்று போலீசில் சரணடைந்தார். கொலை குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பூட்டியிருந்த வீட்டின் கதவை திறந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரித்திகாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரணடைந்த அன்புராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.