பாடாலூர் அருகே லாரி - பைக் மோதி விபத்து: கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வேலை தேடி சென்ற வாலிபர் பலி!
பாடாலூர்: பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று நடந்த சாலை விபத்தில். வேலை தேடி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து திண்டிவனம் நோக்கி லோடு ஏற்றுவதற்காக லாரி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா செட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சக்திவேல் என்பவர் ஓட்டி சென்றார். லாரி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், வாகனங்கள் அனைத்தும் இரூர் பேருந்து நிறுத்தம் சர்வீஸ் சாலையில் செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் லாரி சர்வீஸ் சாலைக்கு திரும்ப முயன்ற போது அந்த வழியாக கன்னியாகுமரி மாவட்டம், குழி துறை தாலுகா, அன்பையன் தல விளை கிராமத்தைச் சேர்ந்த செல்வன் மகன் சஜீத் (25).என்பவர் ஓட்டி வந்த கேடிஎம் பைக் லாரி மீது விபத்து ஏற்பட்டது. இதில் பின்பக்கத்தில் சஜீத் மோதி கீழே விழுந்ததால். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சஜீத் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பாடாலூர் போலீசார் லாரி டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வேலை தேடி சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சாலை பணிகள் நடக்கும் பொழுது முறையான சமிக்கைகளை உரிய தூரத்திற்கு முன்னரே செய்து வேண்டும் என வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.