ஆணவத்தில் இருப்பவர்களை ஆண்டவன் தண்டிப்பான்: தவெகவில் இணைந்த செங்கோட்டையன் கருத்து
சென்னை: நான் என்ற ஆணவத்தில் இருப்பவர்களை ஆண்டவன் தண்டிப்பான் என்று தவெகவில் இணைந்த பிறகு செங்கோட்டையன் கருத்து தெரிவித்தார். தவெகவில் இணைந்த பின் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா மறைந்த பிறகு 3 கூறுகளாக அதிமுக பிரிந்தது. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று கருத்துகளை வலியுறுத்தினோம். இதுகுறித்து கருத்து பரிமாறப்பட்டது. ஆனால், செயல்படுத்த இயலவில்லை. ‘நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என்று பார்த்துக் கொள்வார், தண்டித்து விடுவார்’. இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கிறார். முதலில் எனது பொறுப்புகளை எடுத்தார்கள்.
எல்லோரும் ஒருங்கிணைங்கப்பட வேண்டும் என்பதற்காக தேவர் ஜெயந்திக்கு சென்று பேசிவிட்டு திரும்பும்போது கட்சியின் உறுப்பினர் பதவியையும் எடுத்து விட்டார்கள். இந்த இயக்கத்துக்காக ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த எனக்கு கிடைத்த பரிசு உறுப்பினர் பதவிகூட எடுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டேன். நான் மட்டுமல்ல, என்னோடு சார்ந்தவர்களின் பதவியும் எடுக்கப்பட்டது. அதற்கு பிறகு, எனது முடிவை பொறுத்தவரை இன்றைக்கு தெளிவான முடிவை மேற்கொண்டுதான் இன்றைக்கு தவெகவில் இணைந்திருக்கிறேன். ஏன் இங்கு இணைந்தீர்கள் என்ற ஒரு கேள்விகூட எல்லோரும் கேட்கக்கூடும்.
இதற்கு காரணங்கள் இருக்கிறது. இன்று திமுக, அதிமுக இரண்டும் ஒன்றாக இணைந்துதான் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் இத்தனை நாட்களுக்குள் இணைய வேண்டும் என்று நான் 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை. என்னை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அவரே (எடப்பாடி) கெடு என்ற வார்த்தையை போட வைத்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார். சர்வதேச திரைப்பட விழாவில் கோவா புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்திடம் தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டு சென்றார்.
* செங்கோட்டையனின் அனுபவம் உறுதுணையாக இருக்கும்; விஜய் பேச்சு
விஜய் நேற்று எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,‘ 20 வயது இளைஞனாக இருக்கும்போதே எம்ஜிஆரை நம்பி அவரின் மன்றத்தில் இணைந்து அந்த இளம்வயதிலேயே எம்எல்ஏ என்கிற பெரிய பொறுப்பை ஏற்றவர். அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். 50 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையனின் அரசியல் அனுபவமும், களப்பணியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவரையும் அவருடன் கட்சியில் இணைபவர்களையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்,’என்று பேசினார்.