முருகப்பெருமானுக்கு உகந்த ஆடிக் கிருத்திகை திருநாள்: பலவகை காவடிகளுடன் நீண்ட நேரம் காத்திருந்து கந்தனை தரிசிக்கும் பக்தர்கள்
திருவள்ளூர்: ஆடிக் கிருத்திகையையொட்டி முகப்பெருமானின் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. முருகப்பெருமானை தரிசிக்க பல்வேறு காவடிகளை சுமந்தவாறு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். முருகப்பெருமானுக்கு உகந்த ஆடிக் கிருத்திகையையொட்டி, திருத்தணி முருகனை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் மலை கோயிலில் குவிந்தனர். பல்வேறு வகையான காவடிகளை சுமந்து வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரக்கோணம் - திருத்தணி இடையே 3 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.
பழனி முருகன் கோயிலுக்கு மலர், மயில் என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து கொண்டு பக்தர்கள் வந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மலை கோயிலுக்கு செல்லக்கூடிய பாதை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது. பக்தர்கள் யானை பாதை வழியாக மலை கோயிலுக்கு செல்லவும், சாமி தரிசனம் முடித்த பக்தர்கள் படி பாதை வழியாக கீழே இறங்கி செல்லவும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. திருவண்ணாமலையில் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த வட வீதி முருகன் கோயிலுக்கு 1008 காவடிகள், 501 பால் குடங்கள் ஏந்தி பக்தர்கள் மாடவீதியில் நடமாடியப்படி அரோகரா முழக்கத்துடன் ஊர்வலமாக சென்றனர்.