ஆந்திர மாநிலம் கைலாசகிரியில் நாட்டிலேயே நீளமான கண்ணாடி பாலம்: வரும் 25ம்தேதி திறப்பு
திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கைலாசகிரி மலைப்பகுதியில் வங்க கடற்கரையொட்டி நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம் ரூ.7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 263 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் 55 மீட்டர் நீளம் கொண்டதாக அமைந்துள்ளது. இப்பணி தொடங்கிய 8 மாதத்தில் முழு கட்டுமான பணிகளும் முடிந்துள்ளது. இந்த கண்ணாடி பாலத்தில் ஒரு பக்கம் மலைப்பகுதியும், மற்றொரு பகுதியில் வங்க கடலும் உள்ளது. பாலத்தில் நடந்து சென்றபடி மலை மற்றும் கடலின் அழகையும், இயற்கை காட்சிகளையும் ரசிக்கலாம்.
இந்த பாலம் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் புயல் மற்றும் கடலோர நகரம் சந்திக்கும் சூறாவளிகளையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் நின்று இயற்கையின் அழகை கண்டு ரசிக்கலாம். ஒரு சதுர மீட்டருக்கு 500 கிலோ எடையுள்ள சுமைகளையும் தாங்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 40 பேர் கொண்ட குழுக்களாக மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்ணாடி பாலம் வரும் 25ம்தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. இந்த கண்ணாடி பாலம், விரைவில் விசாகப்பட்டினத்தின் புதிய அடையாளமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுற்றுலா வளர்ச்சிக்கும், மாநிலத்தின் அடையாளத்துக்கும் பெரும் பங்கு வகிக்குக்கும் என்றும் விசாகப்பட்டினம் பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்த கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.