லண்டன் போலீஸ் அதிரடி பாக். வீரர் ஹைதர் அலி பாலியல் புகாரில் கைது: பாஸ்போர்ட் பறிமுதல்
லண்டன்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ஏ அணி அதிரடி பேட்ஸ்மேன் ஹைதர் அலி (24), பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் ஏ அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அந்த அணியில் பாக். வீரர் ஹைதர் அலி இடம்பெற்றுள்ளார். இவர் மீது, பாக். வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த ஜூலை 23ம் தேதி, மான்செஸ்டர் நகரில் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஹைதர் அலி ஈடுபட்டதாக போலீசாரிடம் புகார் அளித்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரது பாஸ்போர்டை பறிமுதல் செய்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணைக்கு பின் ஹைதர் அலி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரிடம் முழு விசாரணை முடியவில்லை என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக ஹைதர் உறுதி அளித்ததன் பேரில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாக். வீரர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பாக். கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஹைதர் அலி, கடந்த 2020ல் பாக் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டார். பாக். அணிக்காக, இரு ஒரு நாள் போட்டிகளிலும், 35 டி20 போட்டிகளிலும் அவர் ஆடியுள்ளார்.