மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் புதிய வருமான வரி மசோதா நிறைவேறியது: எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு
புதுடெல்லி: மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் எந்த விவாதமும் இன்றி புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் இம்மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து நிறைவேற்றினார். பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
இதற்கு ஒன்றிய அரசு மறுப்பதால், மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து அமளி நீடிக்கிறது. நேற்றும் இரு அவைகளிலும் இந்த விவகாரத்தில் கடும் அமளி நிலவியது. மக்களவையில் நேற்று முன்தினம் அமளிக்கு இடையே 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்றும் அமளிக்கு இடையே முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு கூடியதும், அமளிக்கு இடையே சில நிமிட விவாதத்துடன் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு, ஒழுங்குமுறை திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதே போல, இந்திய துறைமுகங்கள் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. திவால் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற தேர்வுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் அமளி காரணமாக காலையில் இருந்தே பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாலை 3 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூன கார்கே, பீகார் விவகாரம் குறித்து பேச முயன்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜே.பி.நட்டா, ‘‘அவைக்கு சம்மந்தமில்லாத விஷயத்தை பேச எதிர்க்கட்சி தலைவர் முயற்சிக்கிறார்’’ என முறையிட்டார். இதனால், ஆளும், எதிர்க்கட்சி தரப்பில் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகளின் அமளியால் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் 64 மணி நேரம் 25 நிமிடங்கள் வீணாகி இருப்பதாக நட்டா கூறினார்.
பின்னர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி மசோதா மற்றும் வரிவிதிப்பு திருத்த சட்டங்கள் மசோதாக்களை தாக்கல் செய்தார்.
அப்போது அவர், ‘‘இது ஒரு முக்கியமான மசோதா. 60 ஆண்டு கால வருமான வரி சட்டத்தை மாற்றக் கூடிய மசோதா. இதன் மூலம் வருமான வரிச் சட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. 75,000 மனித நேரங்கள் செலவழித்து இந்த திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் மீது 16 மணி நேரம் விவாதம் நடத்த அலுவல் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன. ஆனால் அவர்கள் விவாதத்தில் பங்கேற்க விரும்பாமல் வெளியேறியது அதிர்ச்சி அளிக்கிறது’’ என்றார். இதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நேற்று முன்தினம் மக்களவையில் புதிய வருமான வரி மசோதா வெறும் 3 நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே போல மாநிலங்களவையிலும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
* அடுத்த அமர்வு 18ம் தேதி
சுதந்திர தினத்தையொட்டி நாடாளுமன்றத்திற்கு அடுத்த 3 நாட்கள் விடுமுறையாகும். எனவே இரு அவைகளும் வரும் 18ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அடுத்த அமர்வு வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும்.
* தேசிய விளையாட்டு மசோதா நிறைவேற்றம்
மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதாக்களை தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் சுதந்திரத்திற்கு பிறகு இந்திய விளையாட்டுகளில் மிகப்பெரிய சீர்த்திருத்தம் என அவர் குறிப்பிட்டார். புதிதாக தேசிய விளையாட்டு வாரியத்தை உருவாக்குவதன் மூலம் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் செயல்பாட்டை மாற்றியமைப்பதே விளையாட்டு நிர்வாக மசோதாவின் நோக்கமாகும். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே நேற்று முன்தினம் மக்களவையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.