தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் நடந்தாலும், திமுக கூட்டணியே மாபெரும் வெற்றி அடையும் : கருத்துக்கணிப்பில் தகவல்
சென்னை : தமிழக அரசியலில் விஜய்யின் வருகை, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும் என இந்தியா டுடே - சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே - சி வோட்டர் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் நடைபெற்றால் கூட திமுக கூட்டணியே மாபெரும் வெற்றிபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் ஆட்சிக்கு எதிரான மனநிலையையும் கடந்து தமிழ்நாட்டில் உள்ள 36 மக்களவை தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதற்கான சூழல் நிலவுவதாக கருத்து கணிப்பு கூறுகிறது.
அதே நேரத்தில் அதிமுக - பாஜக கூட்டணி 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு உள்ளிட்ட மாநில உரிமைகளில் ஒன்றிய அரசுக்கு எதிரான திமுகவின் போராட்டங்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு உள்ளதாகவும் சி வோட்டர் தெரிவித்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் வாக்கு 47% ஆக இருந்த நிலையில், இன்று தேர்தல் நடத்தப்பட்டால் 48% வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் புதிதாக களத்திற்கு வந்துள்ள விஜய், திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளையே பிரிப்பார் என்றும் அதிமுகவுக்கு விஜய் அதிக பாதிப்பை ஏற்படுத்துவார் என்றும் கருத்து கணிப்பு சுட்டிக்காட்டி உள்ளது. இதன்படி நடந்தால் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து திமுக கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் என்றும் இந்தியா டுடே - சி வோட்டர் கருத்து கணிப்பு கூறியுள்ளது.